சென்னை: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டடங்களை திறந்து வைத்து, 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள். 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பன்முக மருத்துவமனைகள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகங்கள், கால்நடைகளுக்கான களக் கண்காணிப்பு அலுவலகங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த கட்டடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கால்நடைகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம்; மயிலாடுதுறை மாவட்டம், மாதானம் கிராமத்தில் 49.50 லட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டம், கோட்டகரம் கிராமத்தில் 54 லட்சம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பெயர்தக்கா கிராமத்தில் 54 லட்சம் ரூபாய் செலவிலும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், மருதம்புத்தூர் மற்றும் பாப்பன்குளம் கிராமங்களில் 1.18 கோடி ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம்,
பன்பொழி மற்றும் வாசுதேவநல்லூர் கிராமங்களில் 1.18 கோடி செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம், பிள்ளைதண்ணீர்பந்தல் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை கிராமத்தில் 1.18 கோடி ரூபாய் செலவிலும். இராமநாதபுரம் மாவட்டம், போகளூர் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள்; திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடம்:நீலகிரியில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கையில் 8 கோடியே 70 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள்;
சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் 5 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம்: என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்கால்நடை பராமரிப்புத் துறையில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 208 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் ந.சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.