சென்னை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.55.43 கோடி செலவிலான கட்டடங்களையும், மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடி செலவிலான கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 55 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், மீன்வளத்துறை சார்பில் 112 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் 12 கோடியே 82 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 152.15 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனை, கால்நடை பன்முக மருத்துவமனை, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகம், களக் கண்காணிப்பு அலுவலகம் போன்ற 219 கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கால்நடை பராமரிப்புத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 3 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனைக் கட்டடம்; இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கோடியே 17 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடம் மற்றும் நீராவியில் கால்நடை மருந்தகக் கட்டடம்;
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 2 கோடியே 25 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம், கும்பகோணம் கால்நடை மருத்துவமனைக் கட்டடம் மற்றும் பெருமகளூர் கால்நடை மருந்தகக் கட்டடம்; தூத்துக்குடி மற்றும் வேலூரில் தலா 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டடங்கள்;
புதுக்கோட்டை மாவட்டம் – வைத்தூர், மீமிசல், பாக்குடி, பெரியகுரும்பப்பட்டி, மண்டையூர் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் 2 கோடியே 32 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;
கன்னியாகுமரி மாவட்டம் – பார்வதிபுரத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் மாவட்டம் – கோமங்களத்தில் 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்; திருவண்ணாமலை மாவட்டம், தேசூர், தெள்ளார், கீழ்நகர், வெம்பாக்கம் மற்றும் மோரணம் ஆகிய இடங்களில் 2 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் – எரையூர் மற்றும் திருநாவலூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் – திருப்புக்குழியில் 54 இலட்சம் ரூபாய் செலவிலும், கரூர் மாவட்டம் – தரகம்பட்டி, பஞ்சப்பட்டி மற்றும் தோகமலை ஆகிய இடங்களில் 1 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்; என மொத்தம் 22 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டம், மாதவரம் பால்பண்ணையில் கால்நடை நோய் தொற்றுகளுக்கான தடுப்பூசிகள், தயாரிப்பதற்காக 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டடம், நாட்டுச் சிறுவிடை கோழியினை வளர்ப்பதற்காக 77 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கோழிக் கூண்டு கொட்டகை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள பல்கலைக்கழக கண்டுபிடிப்பு மற்றும் கருவி தயாரிப்பு மையத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட 2 கோடி ரூபாய் செலவில் சேமிப்பு அறை, தயாரிப்புப்பட்டறை மற்றும் அலுவலகம்;
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஆய்வக விலங்கினக் கூடம் மற்றும் 3 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் தேர்வு அறை கட்டடம்;
திருநெல்வேலி மாவட்டம், இராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 5 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம்;
தருமபுரி மாவட்டம், பல்லெனஅள்ளியில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டபட்டுள்ள நிர்வாகக் கட்டடம் மற்றும் மாட்டு கொட்டகைகள்;
திருவள்ளுர் மாவட்டம், கொடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரியில் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம், வகுப்பறைகள் மற்றும் மூன்று ஆய்வகக் கட்டடங்கள்; தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மையக் கட்டடங்கள்; என மொத்தம் 33 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவிலான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன்விதைப் பண்ணைகளை திறந்து வைத்தல்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் 22 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள படகு அணையும் ஜெட்டி மற்றும் குந்துகால் மீன் இறங்குதளத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள்;
மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் இறங்குதளம்; கடலூர் மாவட்டம், சுனாமி நகர், அக்கரைகோரி ஆகிய மீனவ கிராமங்களில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய மீன் இறங்குதளம் மற்றும் போர்டோனோவா அன்னன்கோவில், முடசலோடை ஆகிய மீன் இறங்குதளங்களில் 19 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள், லால்பேட்டையில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட அரசு மீன்விதை பண்ணை மற்றும் அகரத்தில் 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அரசு மீன்விதை பண்ணை;
திருநெல்வேலி மாவட்டம், அருவிக்கரை மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் இறங்குதளம் மற்றும் மணிமுத்தாறில் 5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு மீன்பண்ணை நாற்றங்கால் குளங்கள்; கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை மீனவ கிராமத்தில் 22 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம்; திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாற்றில் 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன்பண்ணை;
விருதுநகர் மாவட்டம், பிளவக்கல்லில் 2 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள்; நீலகிரி மாவட்டம், அவலஞ்சியில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட அரசு ட்ரவுட் மீன்விதை பண்ணை; என மொத்தம் 112 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன்விதைப் பண்ணைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தல்
நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில், தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 8,506 சதுர அடி பரப்பளவில் 12 கோடியே 82 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மையக் கட்டடம், நுழைவு வளைவு கட்டுமானம் மற்றும் 1210 மீட்டர் நீளத்தில் இருபுறமும் தடுப்புச்சுவருடன் கூடிய கான்கிரீட் சாலை ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த உழவர் பயிற்சி மையக் கட்டடத்தில் பயிற்சிக் கூடம், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி தங்கும் அறைகள், விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் என்.பெலிக்ஸ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.என். செல்வகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.