திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் இன்று மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடராஜருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி திருமஞ்சன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்றிரவு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் 2ம் பிரகாரத்தில் இருந்து 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்றுஅதிகாலை ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் சிறப்பு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடாந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இதையடுத்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் 5ம் பிரகாரம், திருமஞ்சன கோபுரம் வழியாக சென்று அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடந்து மாட வீதியில் பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு மண்டகபடி செய்து வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவங்களின்போது, ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசல் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
ஆனால், நடராஜர் புறப்பாடு மட்டும், திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடைபெறுவது என்பது தனி சிறப்பாகும். ஆனி திருமஞ்சனத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் தரிசனம் செய்ய சுமார் 3மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.