Tuesday, September 10, 2024
Home » வெற்றித் தேவதை!

வெற்றித் தேவதை!

by Nithya

விருச்சிக ராசி என்பது நீர் ராசியாகும். விருச்சிக ராசிப் பெண்கள் திருத்தமான முக அமைப்பும் வடிவான உடலமைப்பும் கொண்டவர்கள். அதிபுத்திசாலிகள். மனத்துணிவு உடையோர். இவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் பின்பு இவரால்கூட அதை மாற்ற இயலாது. இவர்கள் படபடவென்று தன் உள்ளத்தில் இருப்பதை எவரிடமும் அள்ளிக் கொட்டுவது கிடையாது. தன் எண்ணங்களையும் ஆசைகளையும் மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். யாரைப் பற்றியும் எடுத்த இடத்தில்
விமர்சிக்க மாட்டார்கள்.

மற்றவர்களுடைய பேச்சையும் செயலையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பிறகும்கூட அடுத்தவர்களைப் பற்றி வெளியில் பேச மாட்டார்கள். இவர்களிடம் கேட்டால் மட்டும் தெளிவான கருத்தை அழகாக எடுத்துரைப்பார்கள்.

ஆழ்கடல் அமைதி

விருச்சிக ராசி பெண் ஆழ்கடல் போல் அமைதியும் மர்மங்களும் நிறைந்தவள். அடக்கமான முகபாவமும் அன்பான நடவடிக்கையும் மற்றவர்களை அதிகம் ஈர்க்கும். இவர்களின் கண்கள் வசீகரமானவை. புன்சிரிப்பு எவரையும் தன்பால் ஈர்க்கக்கூடியவை. இவர்களின் நாணம் கலந்த புன்னகை அடிக்கடி வெட்கப்படும் முகம் ஆகியவற்றைக் கண்டு ஆண்கள் தங்கள் மனதைப் பறிகொடுத்து விடுவார்கள். ஆனால், உண்மையில் இவர் ஆண்கள் அணுகுவதற்கு எளிதானவர் கிடையாது.

வெற்றித் தேவதை

இந்த ராசியில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. இதுவரை பார்த்த ராசிகளில் இன்பங்கள் அதிகமாக இருந்திருக்கும் இந்த ராசியில் இருந்து துன்பங்களும் தோன்றத் தொடங்கும். இது இரண்டும் கலந்த ராசியாகும். ஆழ்கடலைப் போல அமைதியாக விளங்கும் பலவீனமானவர்கள் போல் காணப்படுவர். உடல் வலிமை குறைந்தவர்களாகவும் தோன்றுவர். கூட்டுக் குடும்பத்தினர் இப்பெண்களை சாதாரணமாகப் பார்க்கும் போது ஐயோ பாவம் இந்தப் பெண்களால் எந்தக் கஷ்டத்தையும் தாங்க இயலாது. இவர்கள் மனமும் உடலும் பலவீனமானது என்று பெரியவர்கள் சொல்வர். சிறுவயதில் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். வீட்டில் யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார்கள். இவர்களுக்கு ஊக்கமும் உரமும் கொடுத்து வளர்த்தால் இந்த அடிமைப் பெண்கள் வெற்றித் தேவதைகளாக உருவெடுப்பார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் மனத் துணிவும் உடையவர்களாக மாறிவிடுவார்கள். ராணுவ அதிகாரிகளாக மீட்புப் படை வீராங்கனைகளாக மலையேற்றக் குழுவின் தலைவியாக மாறிவிடுவார்கள்.

ஆணுக்குப் பெண் நிகர்

வெப்பத்துக்கு உருகும் தண்ணீரைப் போல் இருப்பவர்கள் மன அழுத்தத்தால் எறிந்தால் தலையையே உடைத்து ரத்தம் வர வைக்கும் ஐஸ் கட்டியாக மாறி விடுவதும் உண்டு. சிறுமியாக நாம் பார்த்த அந்தப் பெண்ணா இவள் என்று வியந்து பார்க்கும் அளவுக்கு பெரிய தொழில் முனைபவர்களாகவும் ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் அலட்சியமாக செய்யும் துணிச்சலான பெண்களாகவும் நடுவயதில் மாறிவிடுவர்.

பணி ராட்சசி

விருச்சிக ராசி பெண்களுக்கு இலக்கு ஒன்றுதான் குறி. இவர்கள் நினைத்ததை அடையும் வரை ஓய மாட்டார்கள். பசி தூக்கம் மறந்து ‘பணி ராட்சசியாக’ செயல்படுவார்கள். மன உறுதியில் மலையைப் போன்றவர்கள். இவர்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்கள். எவராலும் இவர்கள் மனதை மாற்றவே இயலாது.

நிமிர்ந்து நில் துணிந்து செல்

அடுத்தவர் சொல் கேட்டு நடக்கும் அடக்கமான பெண்பிள்ளைகளாக பெரிய குடும்பத்தில் இருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் சரி என்று கேட்டு அனைவரின் வேலைகளையும் அடுத்தடுத்து செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் நிமிர்ந்து நின்று அனைவரையும் இவர்கள் ஏவலுக்கு கட்டுப்படுத்தி வேலை வாங்கும் துணிவைப் பெற்றுவிடுவார்கள். இவர்களால் பணிவான தொழிலாளியாக இருக்கவும் முடியும், துணிச்சலான முதலாளியாகத் திகழவும் முடியும். இவர்கள் வாழ்வில் இரண்டும் இருப்பதை காணலாம். ராசியாதிபதி அல்லது லக்னாதிபதி வலு இழந்து இருந்தால், இவர்கள் காலம் முழுக்க அடங்கிப் போய்விடுவதும் உண்டு. இவர்களின் ஆசைகள் பிறர் அறியாமல் போய்விடும்.

நன்றி விஸ்வாசம் அதிகம்

பிற செய்த அன்பான உதவிகளை இறுதிமூச்சு உள்ளவரை மறக்க மாட்டார்கள். ஒரு நன்மை செய்தால், இவர்கள் பத்து நன்மை திரும்பச் செய்வார்கள். பிறருக்கு உதவுவதில் தாராள மனப்பான்மை உடையவர்கள்.

சேமிப்புத் திலகம்

பண விஷயத்தில் கறாராக இருப்பார்கள். அனாவசியச் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். பணத்தை ஒளித்துவைப்பது இவர்களுடைய பழக்கம். இவர்கள் கையில் பணம் இருப்பது வெளியே தெரியாது. ஆனால், ஒரு அவசரத் தேவைக்கு உதவும் அளவுக்கு இவர்களிடம் பணம் இருக்கும்.

உயிரைக் கொடு – உயிரை எடு

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். பொதுவாகவே செவ்வாய் நினைத்ததை நினைத்தவுடன் செயல்படுத்தும் வேகத்தையும் துணிவையும் வழங்குவான். இந்த இயல்பு இவர்களுக்கு காதல் இருக்கும். காதலிலும் நினைத்தவுடன் எதையும் செய்ய வேண்டும் என்று துடிப்பார்களே தவிர, அதன் பின் விளைவுகளைப் பற்றி அந்த நேரம் யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பெண்கள் காதலருக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பவர்கள். நம்பிக்கைத் துரோகம் செய்தால், காதலரின் உயிரை எடுக்கவும்
தயாராக இருப்பார்கள்.

அரிச்சந்திரன் – சந்திரமதி

நேர்மை, உண்மை, ஆகியவை இவர்களின் உயிர்மூச்சு. திருமணத்திற்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் இவர்கள் மனதளவிலும் உடலளவிலும் 100% உண்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். இவர்களால் கணவர் சொல்லும் ஒரு பொய்யைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகள் பொய் சொன்னால் அடித்து துவம்சம் பண்ணிவிடுவார்கள். கோப தாபங்கள் அதிகம் உள்ள விருச்சிக ராசிப் பெண்கள் மன்னிக்கவும் மறக்கவும் கற்றவர்கள். வீட்டார் செய்யும் தவறுகளை மன்னித்து விடுவார்கள். ஆனால், துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்.

பொருத்தமான ராசிகள்

கடகம், மகரம், மீனம் போன்ற மற்ற நீர்ராசிகள் இவர்களோடு மனம் ஒத்து வாழ தகுதி உடையன. மண் ராசிகளையும் ஜோடி சேர்க்கலாம் என்றாலும், ரிஷபராசி, சிம்மராசி போன்றவை இவர்களின் கோபதாபங்களுக்கு ஏற்றவை அல்ல.

You may also like

Leave a Comment

17 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi