செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சியில், கடந்த 4 மாதங்களாக அங்கன்வாடி மையம் மின்சாரம் வசதியின்றி இயங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில் அங்கன்வாடி வாடி மையம் உள்ளது. இப்பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. நாளடைவில் இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சிதிலமடைந்து போனதால் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
கடந்த ஐந்து மாதம் முன்புதான் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் குத்துவிளக்கேற்றி இதை திறந்து வைத்தார். இந்த கட்டிடத்திற்கு கட்டவேண்டிய மின் வாரிய கட்டணத்தை கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் திறக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதையும் நாளடைவில் துண்டித்து விட்டதால் தற்போது 4 மாதங்களாக மின்சாரம் இல்லாமல் இந்த அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடியில் 36 குழந்தைகள் இருந்து வந்தனர். தற்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 2 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பெற்றோர் கூறுகையில், ‘‘தற்போதுள்ள குழந்தைகள் மின் விசிறி இல்லாமல் இருப்பது மிக மிக கடினமானது.
குழந்தைகளுக்கு அங்கன்வாடி பொறுப்பாளர் விசிறிக்கொண்டே உறங்க வைப்பார். மின்சாரம் இல்லாததால் காற்று வசதியில்லாமல் வெப்பத்தின் காரணமாக குழந்தைகளுக்கு சின்ன சின்ன கட்டிகள் வருகிறது. இதனால், வீட்டுக்கு வந்தபிறகு குழந்தைகள் அழுதபடியே உள்ளன. அதனால்தான் குழந்தைகளை அஙகன்வாடிக்கு அனுப்புவதில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் என அனைத்து இடங்களிலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் மின்வாரியத்திற்கு கட்டவேண்டிய நிலுவை தொகையை செலுத்தி மின் வசதியோடு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.