புனே: தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், தற்போது 5வது நபராக மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்போரை அடையாளங்கண்டு, அவர்களின் வீடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் தொடர்ந்து புனேவைச் சேர்ந்த ஜுபியர் நூர் முகமது ஷேக் என்ற அபு நுசைபா, மும்பையைச் சேர்ந்த தபிஷ் நாசர் சித்திக், ஷர்ஜீல் ஷேக், சுல்பிகர் அலி, தானேவைச் சேர்ந்தவர் பரோடாவாலா ஆகிய நான்கு பேரை கைது செய்னைர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று மயக்கவியல் நிபுணரும், மருத்துவருமான அட்னாலி சர்க்கார் (43) என்பவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து கோந்த்வா காவல்துறையின் மூத்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சோனாவனே கூறுகையில், ‘என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட அட்னாலி சர்க்காரின் வீட்டில், மின்னணு சாதனங்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. தற்போது வரை கைது செய்யப்பட்ட 5 பேரும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கான சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மருத்துவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.