சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் ஆகிய 3 தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். 3 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் கருத்து கேட்டார். மு.க.ஸ்டாலினும், நிர்வாகிகளும் மனம் விட்டு பேசினர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உங்கள் தொகுதிகளில் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற பாடுபட வேண்டும்.
திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டதால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.