Wednesday, February 21, 2024
Home » ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா?

ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா?

by Lakshmipathi

*கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதி மாவட்டத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. இந்த ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டி மற்றும் கடமலை-மயிலை‌ என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 30 கிராம ஊராட்சிகளும், 100க்கும்‌ மேற்பட்ட கிராமங்களும், 150க்கும் மேற்பட்ட உட் கிராமங்களும் உள்ளனர்.

இந்த ஊராட்சிகளில் மொட்டனூத்து ஊராட்சியில் நல்லமுடிப்பட்டி, நீரார்பட்டி, அ.பெருமாள்பட்டி, ராமசந்திராபுரம், மொட்டனூத்து, ராமநாதபுரம், அம்மாபட்டி, கொப்பையம்பட்டி, ரோசனப்பட்டி, தென்பழனி, ஆசாரிபட்டி, கே.காமாட்சிபுரம், நாகுலகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ள ஊராட்சி மொட்டனூத்து ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

மொட்டனூத்து ஊராட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பொதுவாக பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக மொட்டனூத்து ஊராட்சியில் ரோசனப்பட்டி கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமமே பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ரோசனப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதேபோல் கழிவுநீர் வாறுகால் வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகள் சேறும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவர்களது வீட்டிற்கு நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றன. டூவீலரில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆட்டோ கூட வீட்டிற்கு அருகில் வர முடியாத நிலை உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் இருப்பதால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ரோசனப்பட்டி கிராமத்தில் மற்றொரு இடத்தில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த கிராமத்திற்கு நடுவே அமைந்துள்ள ஒரு தண்ணீர் தேக்கி வைக்கும் குளத்தில் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து கழிவுநீர் அந்த குளத்தில் வந்து கொண்டிருப்பதால், குளத்தை சுற்றி அதிக அளவு முள்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த குளத்தில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகிறது. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இக்கிராமத்தில் மற்றொரு இடத்தில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கழிவுநீர் ஓடை வழியாக சென்று, கழிவு நீர் கடப்பதற்கு வழி இல்லாமல் கிராமத்திற்கு முன்புறம் அமைந்துள்ள கண்மாயில் சென்று கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த கன்மாயில் மழைநீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக விளங்கி வரும் கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படுகிறது.

இதேபோல் மொட்டனூத்து, ஆசாரிப்பட்டி, நீரார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஆசாரிபட்டி கிராமத்திலும் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை இல்லாமலும், கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாமலும் மக்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மொட்டனூத்து ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. கிராமத்தின் நுழைவு வாயிலில் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக ரோசனப்பட்டி கிராமத்தில் சாலை வசதி, கழிவுநீர் வாறுகால் வசதி கழிவுநீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பணிகளும் மந்தமாக நடைபெறுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மொட்டனூத்து ஊராட்சியில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

seventeen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi