திருமலை: இயற்கை சீற்றம் எதுவும் இல்லாத நிலையில் கடல் நீர் 400 மீ. உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ேநற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து கடலின் அழகை பார்த்து ரசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 400 மீட்டர் தூரம் வரை கடல் தண்ணீர் உள்வாங்கியது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் கடல் உள்வாங்கியதால் அங்கிருந்த கற்களும் பாறைகளும் வெளிப்பட்டன. இதை பெரும்பாலானவர்கள் தங்கள் செல்போனில் போட்டோவாகவும், வீடியோகவும் எடுத்தனர். மேலும் பலர் ஆபத்தை அறியாமல் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து சில மணி நேரத்தில் மீண்டும் கடல் வழக்கமான நிலைக்கு திரும்பியது.
பொதுவாக இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கடல் உள்வாங்குவது அல்லது முன்னோக்கி வருவது வழக்கம். ஆனால் நேற்று இயற்கை சீற்றம் இல்லாத நிலையில் திடீரென கடல் உள்வாங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: கடல் நீர் உள்வாங்குவதற்கு பருவநிலை மாற்றமே காரணம். கடலில் அலைகளை உருவாக்கும் சந்திரனின் ஈர்ப்பு விசையால் இது நிகழ்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் கடல் உள்வாங்கியது. இதுபோன்ற நேரத்தில் கடலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அலைகளின் பின்னால் ஓட வேண்டாம், கடலோரப்பகுதியை தூரத்தில் இருந்து ரசிக்கலாம். அருகில் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.