திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பொடிலியில் புகையிலை ஏல மையத்தைப் பார்வையிட ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சென்றார். அவர் வருகையின்போது ரதம் சாலையில் உள்ள பி.எஸ்.ஆர். காலனி அருகே பெண்கள் கருப்பு பலூன்கள் மற்றும் பதாகைகளை ஏந்திச் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெகன் மோகனுக்கு சொந்தமான சேனலில் அமராவதி தலைநகர் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அக்கட்சி தலைவர்களின் அநாகரீகமான கருத்துக்களை ஜெகன் மோகன் ரெட்டி கண்டிக்காதது குறித்து கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
மன்னிப்பு கேட்ட பின்னரே பொடிலிக்குள் ஜெகன்மோகன் ரெட்டி நுழைய வேண்டும் என்று அவர்கள் கோரினர். தெலுங்கு தேச கட்சியினர் ‘ஜெகன் மோகன் கோ பேக்’ என்று கோஷங்கள் எழுப்பிய நிலையில், அவரது வாகனம் மீது பெண்கள் செருப்புகளை வீசினர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டக்காரர்களை கற்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் பெண்கள் காயமடைந்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.