ஆந்திராவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூர் பகுதியில், தமிழக அரசால் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, சிலர் காரில் மொத்தமாக ஆந்திராவுக்கு கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ்எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது, உத்தரவின்பேரில் ஆர்.கே.கேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை வங்கனூர் இருளர் காலனியில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மர்ம நபர்கள், போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்டதும், காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
பின்னர், காரை போலீசார் சோதனையிட்டதில் அதில் மூட்டைமூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. ஆர்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை காரில் ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து எஸ்ஐ ராக்கி குமாரி மற்றும் போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை திருவள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


