திருமலை: ஆந்திராவில் எம்எல்சி தேர்தல் விதிகளை மீறி விவசாயிகளை சந்தித்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டி கடந்த 18ம் தேதி பல்நாடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் டயரில் சிக்கி கட்சியின் ஆதரவாளர் சிங்கய்யா என்பவர் இறந்தார். இதுதொடர்பாக நல்லப்பாடு போலீசார், கார் டிரைவர் ரமணாரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மற்றும் உதவியாளர், நிர்வாகிகள் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பிரத்திபாடு இன்ஸ்பெக்டர் சீனிவாசராவ், தாடேப்பள்ளி இன்ஸ்பெக்டர் வீரேந்திரபாபு, நல்லபாடு எஸ்.ஐ. தலைமையில் போலீசார் நேற்று மாலை தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் வீட்டுக்கு சென்று, விபத்து ஏற்படுத்திய குண்டு துளைக்காத காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த பிப்ரவரி 19ம் தேதி எம்எல்சி தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விவசாய விளைபொருட்கள் பிரிவு சந்தை நடந்த இடத்தில் மிளகாய் விவசாயிகளை சந்தித்து அரசியல் உரை நிகழ்த்தினார். இதனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஜெகன்மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபு, கட்சி தலைவர்கள் லெல்லா அப்பிரெட்டி, காவதி மனோகர் நாயுடு, மொடுகுல வேணுகோபால் ரெட்டி மற்றும் பலர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.