திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அச்யுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலம் தொழிற் பூங்காவில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதில் 13 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனகாப்பள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பெரும் தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுவட்டார கிராமங்கள் புகை மண்டலமாக மாறியது.
மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அனிதா தகவல் அறிந்து அனகாப்பள்ளி கலெக்டரிடம் பேசி காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பாய்லர் வெடித்து தீப்பிடிப்பதற்கான காரணங்கள் குறித்தும், தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியம் உள்ளதா என விசாரணைக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றார்.