சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும், என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார். பாஜ சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மஹாலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில், தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒரே நாடு ஒரே தேர்தல் தேசிய ஒருங்கிணைப்பாளர் அணில் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசியதாவது: நான், சென்னையில் வளர்ந்தவன்.
தமிழகத்தை விட்டு நான் சென்றிருக்கலாம். ஆனால் தமிழ் என்னை விட்டு போகவில்லை. அதற்கு தமிழ்நாடு மீது உள்ள தாக்கம் தான். என்றும் தமிழகத்தை மதிப்பேன். எனக்கு பிடித்த திருவள்ளுவர், தமிழ்நாடு சித்தர்கள், தமிழ் கடவுள் முருகன் கோயில் கொண்ட பூமி. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தவறான புரிதல்கள், பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயத்திரத்திற்கு ஆதரவாகவும், தோல்வியுற்றால் எதிராகவும் பேசுவார்கள். இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் புதிதல்ல.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். 5 ஆண்டுக்கு 800 நாட்கள் நாம் தேர்தலுக்காக செலவு செய்கிறோம். நாம் நாட்டின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்தாமல் தேர்தலுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மக்களுக்கு புரிய வைக்கவே நான் இங்கு வந்தேன். தேர்தலில் கவனம் செலுத்தி வந்தால் நம்முடைய வளர்ச்சி தடைபடுகிறது. இதற்கு ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் தான். இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். என்டிஏ கூட்டணி இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.