திருமலை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவை சேர்ந்தவர் ரஷித் (25). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர். அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் கேஷியராகவும் இருந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஜிலானி (30) என்பவருக்கும் இடையே தேர்தல் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதனால் ரஷித்துடன் அவ்வப்போது ஜிலானி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ரஷித், நேற்றிரவு வழக்கம்போல் பணி முடிந்தபிறகு பைக்கில் வீடு திரும்பினார். அங்குள்ள ஜங்ஷன் பகுதியை கடந்தபோது அங்கு நின்றிருந்த ஜிலானி, ரஷித்தை வழிமறித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜிலானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷித்தை சரமாரி வெட்டியுள்ளார். இதில் அவரது ஒரு கை துண்டாகி சாலையில் விழுந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத ஜிலானி சரமாரி தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரஷித் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வினுகொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிலானியை நள்ளிரவு கைது செய்தனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக ரஷித்தை கொன்றதாக ஜிலானி வாக்குமூலம் அளித்தார். பொதுமக்கள் கண் முன் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை செய்யப்படும் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி உள்ளனர்.
ஜெகன்மோகன் கண்டனம்: இதுகுறித்து தகவலறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகரான ஜிலானி, நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கி எனது கட்சியை சேர்ந்த ரஷித்தை கொலை செய்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள குண்டர்கள், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் எங்கள் கட்சியினரை கொலை செய்வது, தாக்குவது, மிரட்டுவதுமாக உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? என தெரியவில்லை. நாட்டில் எந்த மூலையிலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இவ்வளவு கொலைகளும், தாக்குதல்களும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் கண்டிப்பாக பதில் சொல்லவேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.