சென்னை: ஆந்திரா, தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளத்தில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ளது. இதனால் இன்று அந்த வழியாக செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், தெலங்கானாவின் கேசமுத்ரம்- மகபூபாத் இடையே மழை வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து வாரங்கல் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பல இடங்களில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் காரணமாக நேற்று மட்டும் சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 97 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. வெள்ளம் காரணமாக ரயில் நிலையங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்றும் 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று புறப்படுவதாக இருந்த ஜெய்ப்பூா் விரைவு ரயில், ஜிடி விரைவு ரயில், தமிழ்நாடு விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இன்று புறப்பட உள்ள டெல்லி துரந்தோ விரைவு ரயில், அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், பிலாஸ்பூா் விரைவு ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, திருநெல்வேலி-பிலாஸ்பூா் விரைவு ரயில், திருவனந்தபுரம்-டெல்லி கேரளா விரைவு ரயில், மதுரை-சண்டிகா் விரைவு ரயில் உள்ளிட்டவை கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாரங்கல் வழியாக செல்வதற்கு பதிலாக ரேணிகுண்டா, காசிபேட், குண்டக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோன்று கொச்சுவேலி-கோரக்பூா் விரைவு ரயில், ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரயில் சென்னை வராமல் ரேணுகுண்டா வழியாக இயக்கப்படும். ரயில் சேவை மாற்றம் குறித்து பயணிகள் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.