தூத்துக்குடி: ரூ.1 கோடி கஞ்சா கடத்திய வழக்கில் பாஜ, பாமக நிர்வாகி உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் மொத்தம் 5 மூட்டைகளில் 245 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். இதையடுத்து 2 கார்களிலும் இருந்த டிரைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்டோரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, பண்டல்களாக பிரிக்கப்பட்டு இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட இருந்ததும், கஞ்சா கடத்தலில் தமிழகம், புதுவை, ஆந்திரா மற்றும் சர்வதேச கடத்தல் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதும் அம்பலமானது.
இதையடுத்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் தூத்துக்குடி மாதவநாயர் காலனியைச் சேர்ந்த ஆரோன் ராஜேஷ்(31), அவரது மனைவி ஷிவானி(30), தூத்துக்குடி மில்லர்புரம் பாரதி நகரைச் சேர்ந்த டிரைவர் இசக்கி கணேஷ்(29) திருநெல்வேலி டவுனை சேர்ந்த ஸ்ரீமதி (28), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (28), அருண்குமார் (27), திருமணி (29), மூக்காண்டி (எ) ராஜா(30), காளீஸ்வரன் (25), தூத்துக்குடி விஎம்எஸ் நகரை சேர்ந்த திருமணி குமரன் (27), தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சரவணன் (45), சென்னை ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் (50), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் கனிட் ஸ்ரீபாலன் (63), செயின்ட் தாமஸ் மவுண்ட்டை சேர்ந்த தயாளன் (35), சாத்தான்குளத்தை சேர்ந்த மணிகண்டன்(38), குமரி இணயம் ஹெலன் நகரை சேர்ந்த ஜெனி (35) ஆகிய 16 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், கஞ்சா மூட்டைகள், ஒரு பைக் மற்றும் 17 செல்போன்கள், ஒரு இன்டர்நெட் மோடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதி, சட்ட மாணவி ஆவார். பாஜவைச் சேர்ந்த மணிகண்டன் வக்கீலாக உள்ளார், மூக்காண்டி (எ) ராஜா பாமக நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இன்டர்போல், ரா அமைப்பால் தேடப்படும் நபர் பிடிபட்டார்
கைதாகி உள்ள நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் கனிட் ஸ்ரீபாலன், இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர், சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மேலும் இங்கிருந்து கொண்டே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கஞ்சா கடத்தும் புள்ளிகளுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இன்டர்போல் மற்றும் ரா உள்ளிட்ட பாதுகாப்பு துறையினரால் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்து வரும் இவர் தற்போது பிடிபட்டுள்ளார்.