திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்பி கீதா மேற்பார்வையில், சென்னை சரக டிஎஸ்பி சம்பத் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் கோயில்ராஜ் மத்தேயு மற்றும் போலீசார் திருவள்ளூர் தாலுகா, கடம்பத்தூர் அடுத்த விடையூர் கிராமம், ஜாபர் நகர் சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது, கேட்பாரற்று நின்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்ததில், சுமார் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் தமிழ்நாடு பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக, அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து, ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அதேபோல், திருவள்ளுர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார் பொன்னேரி தாலுகா, கிளிக்கொடி கிராம பகுதியில் ரோந்து சென்றபோது, பெருமாள் கோயில் பின்புறம் கேட்பாரற்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற மூட்டைகளை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் 300 கிலோ ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக, அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி ஒரு டன் 300 கிலோவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கும்மிடிப்பூண்டி கிடங்கு, பஞ்செட்டியில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.