சென்னை: தமிழகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை, சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜவகருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர், பறக்கும் படை துணை தாசில்தார் சரவணன் மற்றும் ஊழியர்கள் பொன்னேரி ரயில் நிலையத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது அங்கு ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த வைத்திருந்த 1,440 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் பொன்னேரியில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசிகளை கடத்துப்பவர்கள் யார் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் யார் என பறக்கும் படை மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.