கும்மிடிப்பூண்டி: ஆந்திராவிற்கு கடத்த இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், திருவள்ளூர் பறக்கும் படை துணை வட்டாட்சியர் அருள் வளவன் மற்றும் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை வரை செல்லும் புறநகர் ரயிலில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளில் ஏறி ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வரை ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்தனர்.
இதில், ரயில் பயணிகளின் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு பைகளில் கட்டப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கினர். பறிமுதல் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி பைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. தமிழகத்தில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசியை கிலோ ரூ.5-6க்கு வாங்கி ஆந்திராவிற்கு கடத்தி அங்கு அந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் கிலோ ரூ.20-30 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் சோதனை குறித்து பறக்கும் படை அருள் வளவன் கேட்ட போது இந்த சோதனையின் 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அரசு உணவுக் பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.ஆந்திரவிற்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் புறநகர் ரயில்களில் திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என துணை தாசில்தார் அருள்வளவன் தெரிவித்தார்.