சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்பகுதிக்கு இன்று நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது.
அது விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிமீ தூரத்தில் கடலில் நேற்று நிலை கொண்டு இருந்தது. இந்நிலையில், அது மேலும் வலுவடையத் தொடங்கியது. அதனால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக, வேளாங்கண்ணி, கோடியக்கரை, காரைக்கால் பகுதிகளில் 110 மிமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் டிஜிபி அலுவலகம், அம்பத்தூர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், கத்திவாக்கம், சோழிங்கநல்லூர், மாமல்லபுரம், ஆலந்தூர், அடையாறு, அண்ணா பல்கலைக் கழகம், நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், திருவிக நகர், எம்ஜிஆர் நகர், பெரம்பூர், தேனாம்பேட்டை, முகலிவாக்கம், பெருங்குடி, ஐஸ்அவுஸ், புழல், அயனாவரம், வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், ஆகிய இடங்களில் 100 மிமீ முதல் 80 மிமீ வரை மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும். பின்னர் அது வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை நிலை கொள்ளும். பின்னர் அது 18ம் தேதி வடக்கு ஒடிசா- மேற்கு வங்க கடலோரப் பகுதிக்கு நகர்ந்து செல்லும்.
மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் வடக்கு – வட மேற்கு திசையில் நகரத் தொடங்கும். மேற்கண்ட நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.