சென்னை: தென் ஆப்பிரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சொந்த ஊர் திரும்புவதற்காக விமானத்தில் சென்னை வந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மார்ட்டின் லூதர் (47). இவர் தென்ஆப்பிரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக ஓராண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாலமோன் மார்ட்டின் லூதர் ஆந்திர மாநிலம் சித்தூர் செல்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்தார். பின்னர், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் சென்னை வந்தார்.
இந்நிலையில், விமானத்தில் இருந்து வெளியில் வந்தவர் ஏரோ பிரிட்ஜ் வழியாக தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அத்துடன், சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய போலீசார் சாலமோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.