திருமலை: ஆந்திராவில் நடந்த தேர்தல் வன்முறை குறித்து ஐஜி 150 பக்க அறிக்கை தயாரித்து டிஜிபி டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவிடம் சமர்ப்பித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் வாக்குப்பதிவு நாளன்றும் அதற்குப் பிறகும் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. வினீத் பிரிஜ்லால் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பல்நாடு, தாடிபத்திரி, மச்சர்லா, நரசராவ்பேட்டை, திருப்பதி, சந்திரகிரி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒவ்வொரு அம்சத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய, தேவைப்பட்டால் கூடுதல் பிரிவுகளைச் சேர்க்க டிஜிபி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளில் 33 வன்முறை சம்பவங்களை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி அதிகாரிகள் குழு இரண்டு நாட்கள் ஆய்வு செய்தனர். கலவரம் நடந்த பகுதிகளுக்குச் சென்று உள்ளூர் போலீசார், தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக மக்களிடம் தகவல்களை சேகரித்தனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்றுமுன்தினம் இரவு வரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடர்ந்தது. எஸ்ஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தவற்றை அனைத்தையும் தொகுத்து தேர்தல் நாளன்றும் அதற்குப் பிறகும் நடந்த வன்முறைகள் குறித்த 150 பக்க அறிக்கை டிஜிபிடிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பல்நாடு 22 வழக்குகளும், திருப்பதியில் 4 வழக்குகளும் அனந்தபுரம் மாவட்டத்தில் 7 வழக்குகள் என மொத்தம் 33 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1370 பேர் குற்றவாளிகள் இருந்தாலும் 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை நடக்கும் என்று தெரிந்தும் சிலர் அலட்சியமாக இருப்பதாக எஸ்ஐடி குழு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவத்தில் போலீசார் உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஒத்துழைத்ததையும், வன்முறை சம்பவங்களை காவல்துறை அலட்சியப்படுத்தியதையும் கண்டறிந்தது. இதனால் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சில அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்த அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அரசு அனுப்பும். எஸ்ஐடி அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
* ஜெகன் கட்சி கவுன்சிலர் பைக் எரிப்பு
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், மாச்சர்லா நகராட்சியில் 22வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகான்காளி பிச்சையா. இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பைக்கை நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். வீட்டின் முன்பு தனது பைக் எரிவதை கண்ட பிச்சைய்யா உடனடியாக தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
ஆந்திராவில் தேர்தல் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, தாடிபத்திரியில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினருடன் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் எஸ்பி ராமகிருஷ்ணா தலைமையில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.