திருமலை: ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் இச்சாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 3.40 மணியளவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டதாம். அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே சிதறியது. சத்தம் கேட்டு வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து எழுந்தனர். பின்னர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வினால் சில வீடுகளில் கட்டிலில் இருந்தவர்கள் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது.
இதனால் அப்பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4.03 மணியளவில் மீண்டும் 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் செல்லாமல் விடிய விடிய வீதியிலேயே காத்து கிடந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற நில அதிர்வை நாங்கள் பார்த்ததில்லை. 2 முறையும் சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு இருந்தது. சிறு நில அதிர்வு என்பதால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்பதால் சற்று நிம்மதி அடைந்தோம் என்றனர்.