சென்னை: ஆந்திராவில் பிஎஸ்சி படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடித்த பெண்ணை அரசு பணிக்கான தகுதியுள்ளவராக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012ல் பிஎஸ்சி இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர் எம்.டி.ரம்யா. இவர் தனது மேல் படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இயற்பியல் படிப்பில் சேர்ந்து எம்எஸ்சி பட்டம் பெற்றார். திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி படிப்புக்கு இணையானது என்று சென்னை பல்கலைக்கழகம் ரம்யாவுக்கு சான்றிதழ் தந்தது. இதற்கிடையே ரம்யா பிஎட் பட்டமும் முடித்தார்.
இந்நிலையில், அவர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வையும் எழுதினார். இதையடுத்து, அவரை 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நேர்முக தேர்வுக்கு அழைத்தது. அப்போது, திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழக பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமும் இணையானதல்ல என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கேள்வி எழுப்பியது. அதற்கு ரம்யா, தனக்கு சென்னை பல்கலைக்கழகம் கொடுத்த சான்றிதழை சமர்ப்பித்தார். இதையடுத்து, அவர் அரசு பணிக்காக காத்திருந்தார். இந்நிலையில், உயர் கல்வித்துறை கடந்த 2022 நவம்பர் 7ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டது.
அதில், திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி படிப்பு தமிழ்நாட்டில் அரசு பணிக்கு தகுதியானதல்ல என்று கூறப்பட்டிருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து ரம்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிபுணர்களின் ஆய்வுக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறி ரம்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ரம்யா மேல்முறையீடு செய்தார். இந்த மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2003 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நேர்முக தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.
அரசின் முடிவு நிபுணர்களின் ஆய்வு மற்றும் பரிந்துரைக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, அரசின் உத்தரவை முன்கூட்டியே செயல்படுத்த முடியாது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களை அரசின் இந்த முடிவு பாதிக்கும். எனவே, இந்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகே அதை அமல்படுத்த வேண்டும். மனுதாரரை பொறுத்தவரை மட்டும் அவரை அரசு பணிக்கு தகுதியானவராக அரசு கருத வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.