திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அச்யுதாபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் நேற்று முன்தினம் மருந்து தயாரிக்க பயன்படுத்திய 500 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பாய்லர் திடீரென வெடித்து தீ பரவியது. இதனால் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தது. தீ மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கி இறந்தனர். இதில் சிலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போனது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வரை சுமார் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், சிறு காயங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.