ஆந்திரா: ஆந்திராவில் பள்ளி மாணவியின் பள்ளி பாடப்புத்தகத்தில் காதல் கடிதம் இருந்த விவகாரத்தில் ஆசிரியையும் மனைவியின் தாயாரும் குடுமிபிடி சண்டை போட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி லகரியின் புத்தகத்தில் இருந்த காதல் கடிதத்தை சக மாணவர்கள் எடுத்து ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியை சுனந்தாவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த கடிதம் பள்ளியின் முதல்வரிடம் கொடுக்கப்பட்டதை அடுத்து லகரியின் தாய் பிரியாவை பள்ளிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் கையெழுத்தின் அடிப்படையில் அந்த கடிதம் லகரி எழுதியது இல்லை என தெரியவந்ததை அடுத்து மாணவியையும் அவரது தாயையும் அனுப்பி வைத்தனர். வகுப்பறைக்கு சென்றதும் ஆசிரியர் சுனந்தா காதல் கடிதத்தின் மீது கேள்வி எழுப்பி லகரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லகரி உடனடியாக தனது தயார் பிரியாவுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு சென்ற அவர் ஆசிரியை சுனந்தாவிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அதனை அறிந்த சுனந்தாவின் கணவர் பள்ளிக்கு சென்று மாணவியின் தாயிடம் வாக்குவாதம் செய்தார். தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடந்த இந்த மோதல் உச்சகட்டதை எட்டியதால் ஒருவரை ஒருவர் தலைமுடி பிடித்து கொண்டு தாக்கி கொண்டனர்.