அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில் மேலும் ஒரு தக்காளி விவசாயி வெறும் 45 நாட்களில் கோடீஸ்வராகி இருக்கிறார். பல நேரங்களில் முதலுக்கே மோசம் வைக்கும் விவசாயத்தில் இந்தமுறை நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளி விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.200-ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கரக்கமண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திர மெளலி தனது கிராமத்தில் 12 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்தார், மற்றொரு இடத்தில் மேலும் 10 ஏக்கர் என மொத்தம் 22 ஏக்கரில் தக்காளி பயிரிட்டார்.
எப்போதும் நஷ்டத்தை கொடுத்துவிட்டு போகும் விவசாயம் இந்தமுறை சந்திர மெளலியை கோடீஸ்வரராகி இருக்கிறது. வெறும் 45 நாட்களில் அவர் ரூ.4 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். இவரது தோட்டத்தில் விளைந்த தக்காளி கர்நாடகாவின் கோலார் சந்தையில் 15 கிலோ பெட்டி ரூ.1,000-லிருந்து ரூ.1,500-க்கு விற்பனையானது. மொத்தம் 40,000 பெட்டிகளை அவர் சுமார் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்தார். இதில் முதலீடு ரூ.70 லட்சம், கமிஷன் ரூ.20 லட்சம், போக்குவரத்து செலவு, பாதுகாப்புக்கு ரூ.10 லட்சம் போக தனக்கு ரூ.3 கோடி லாபம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் விவசாயி சந்திர மெளலி.