தாம்பரம்: ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார், முடிச்சூர் அடுத்த மதனபுரம் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி அதில் வந்த 3 நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் கூறியதால், போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். ஆட்டோவின் இருக்கை அடியில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (24), முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (21) என்பது தெரியவந்தது.
மேலும் சுங்கவார்சத்திரம் பகுதியில் அசோக் என்பவர் கொலை செய்த வழக்கில் இருவரும் சிறைக்கு சென்று வந்ததும், எதிரிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கத்தியுடன் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ஆட்டோவுடன் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.