திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு சிறையில் நலமாக உள்ளார். அவருக்கு திடீரென உடல் நிலை பாதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விஐபி வார்டுகள் தயாராக உள்ளது என்று சிறை மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த 36 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிறையில் அவருக்கென தனி மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக்குழுவினர் நேற்று கூறுகையில், `சந்திரபாபு நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக அவரை அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்க ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் விஐபி அறை தயார் நிலையில் உள்ளது. இதுதவிர பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றிலும் விஐபி சிறப்பு வார்டை தயாராக வைத்துள்ளோம்’ என தெரிவித்தனர்.
இதனிடையே சந்திரபாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை கட்டிடத்தில் 100 கைதிகள் வரை தங்க வைக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அவ்வப்போது புகார் கூறிவந்தனர். ஆனால் சிறைத்துறையினர் இதனை நேற்று மறுத்துள்ளனர். 100 கைதிகளும் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.