வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக காரில் செம்மரம் கடத்தப்படுவதாக எஸ்பி ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று வாணியம்பாடி நகர இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், தம்பிதுரை மற்றும் நகர போலீசார் குழுக்களாக பிரிந்து நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஆந்திரா பதிவு எண் கொண்ட கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் அருகே சென்று பார்த்தபோது காரில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் காருக்குள் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடை கொண்ட 8 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நியூடவுன் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக செல்போனில் பேசியபடி சுற்றிக் திரிந்து கொண்டிருந்த வாலிபரை கண்ட போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஆத்துகண்ணூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(25) என்பது தெரிய வந்தது. உடனடியாக வெங்கடேசனை வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை பெங்களூருக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வாணியம்பாடி நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.