*24 பேருக்கு சிகிச்சை
திருமலை : ஆந்திராவில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் பரிமாறிய இரவு உணவில் ஏற்பட்ட புட்பாய்சன் காரணமாக 3 மாணவிகள் இறந்தனர். 24 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினத்தில் ஆதரவற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்திற்கு உரிய அங்கீகாரம் பெறாமல் சுமார் 60 மாணவ, மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி இரவு சமோசா உள்ளிட்டவற்றுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
அதனை 60 பேரும் சாப்பிட்ட நிலையில் நள்ளிரவு முதல் ஒருவர் பின்ஒருவராக திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தனர். இதையறிந்த நிர்வாகிகள் உடனடியாக மாணவ, மாணவிகளை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஜோஸ்வா(9), பவானி(10), ஷ்ரத்தா(9) ஆகிய 3 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தொடர்ந்து 24 பேரும் தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அனகாப்பள்ளி, அல்லூரி சீதாராமராஜு மாவட்ட கலெக்டர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார், அனகாப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா.லோகேஷ், உடனடியாக மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். தீவிர விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: இச்சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், `புட்பாய்சன் விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அங்கீகாரம் இல்லாத விடுதியை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள மற்ற சிறார்களை மீட்டு அரசு சார்பில் பாரமரிக்கப்படுவார்கள். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்’ என்று தெரிவித்துள்ளார்.