*2 பேர் கைது
திருமலை : ஆந்திர மாநிலம் ஏலூரில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் தொண்டப்பாடி பணிகுமார். இவரை மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.44 லட்சம் கள்ளநோட்டு தருவதாக கூறினர்.
இதற்காக கடந்த மாதம் 30ம் தேதி முன்பணமாக ரூ.3 லட்சத்தை கேட்டு பெற்று கொண்டனர். மீதி தொகையை வழங்கிய பின் ரூ.44 லட்சம் கள்ளநோட்டு தருவதாக அந்த கும்பல் கூறியது. இதனால் சந்தேகமடைந்த பணிகுமார் தனது நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதுபோன்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என நண்பர்கள் அறிவுரை வழங்கிய நிலையில், இதுகுறித்து பணிகுமார் ஏலூர் 3வது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையிலான போலீசார் மீதிமுள்ள பணத்தை தருவதாக பணிகுமார் மூலம் அந்த கும்பலை புதுபஸ் ஸ்டாண்டிற்கு வரவழைத்தனர். அப்போது மறைந்து காத்திருந்த போலீசார் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த மருமுடி மதுசூதன ராவ், பீரெல்லி ராம்பாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரூ.100, ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் இதுபோன்ற மோசடியாளர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என ஏலூர் மாவட்ட எஸ்பி கிஷோர் அறிவுறுத்தி உள்ளார்.