திருமலை: இருசக்கர வாகனத்தில் வந்தபோது மின் ஊழியருக்கு ஹெல்மெட் அணியாததால் போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் மின் சப்ளையை துண்டித்தார். ஆந்திர மாநிலம், பார்வதிபுரத்தில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் சென்றார். போலீசார் விரட்டிச்சென்று தடுத்து நிறுத்தினர். ஹெல்மெட் அணியாததால் ₹135 அபராதம் விதித்து அதற்கான இ-சலான் வழங்கினர். இதை அந்த வாலிபர் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர், தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசாரின் உதவி மையத்திற்கு சென்றார். அவர், அங்கிருந்தவர்களிடம் ‘நான் ஆந்திரபிரதேஷ் கிழக்கு பிராந்திய மின்விநியோகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர் உமா’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்களின் இருசக்கர வாகனத்திற்கு ஏன் அபராதம் விதித்தீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போக்குவரத்து போலீஸ் உதவி மையத்திற்கு வரும் மின் சப்ளையை அருகே உள்ள மின்சார கம்பத்தின் மீது ஏறி துண்டித்தார்.
இதுபற்றி போலீசார் கேட்டதற்கு ‘எங்கள் இருசக்கர வாகனத்திற்கே அபராதம் விதித்ததால் மின்சாரத்தை துண்டித்தோம்’ என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து மின்வாரிய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ேபாலீஸ் நிலையத்திற்கு உடனடியாக மின்சப்ளை வழங்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததால் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.