திருமலை : ஆந்திராவில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள ஜக்கையா பேட்டையில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பாய்லர் அருகே பணி செய்து கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாய்லர் வெடி விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.