மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ஜோ ரூட் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- ஜோ ரூட், நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் மேல் அடித்திருக்கிறீர்கள். ஆனால் எந்த மாதிரி ஷாட் ஆடுகிறீர்கள். இப்படி ஒரு ஷாட்டை ஆடுவது வெட்கமாக இல்லையா? தான் சந்தித்த முதல் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்தார். அதன் பிறகு இறங்கி வந்து ஒரு பவுண்டரி அடிக்கிறார்.
இதை எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உங்களுக்கு வெற்றிக்கு வெறும் 40, 50 ரன்கள் தேவைப்படும்போது ஆடுகளம் மோசமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு அதிரடியாக ஆடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. விக்கெட் விழக்கூடாது என்பதற்காக இப்படி அதிரடியாக விளையாடலாம். ஆனால் ஆடுகளம் நன்றாக இருக்கும் போது நீங்கள் உங்களை நம்பி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகள் எதிர்முனையில் விழுந்தாலும் ஒரு முனையில் நீங்கள் அதிரடி காட்டி இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு சூழலே இல்லாத நிலையில் ஏன் இப்படி தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டம் இழக்கவேண்டும்.
உங்களைப் போன்ற ஒரு வீரரை ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என்றால், ஒரு சிறந்த பந்தை பவுலர்கள் வீச வேண்டும். ஆனால் நீங்கள் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டம் இழந்து வருகிறீர்கள். ஆண்டர்சன் தன் பந்துவீச்சு முறையில் மிகவும் சுவாரசியமாக செயல்படுகிறார். என்னை கேட்டால் ஜோ ரூட், ஆண்டர்சனிடம் பேசி தன் பேட்டிங் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
இதுபோன்ற ஆடுகளத்தில் இந்த வயதில் ஆண்டர்சன் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். அவருக்கு எப்படி போட்டிக்கு தயாராக வேண்டும் என்று தெரிகிறது. பேஸ் பால் போன்ற ஆக்ரோஷமான யுத்தியை ஆண்டர்சன் பாலோ செய்வதில்லை. பேஸ் பால் திட்டத்தின் பவுலர் சின்ன ரிஸ்க் எடுக்க வேண்டும். ஆனால் ஆண்டர்சன் அப்படி செய்யவில்லை. எது சரியோ அதனை அவர் செய்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.