உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை அந்தப் பரம்பொருளே நிர்ணயித்த, தற்கால சிந்தனைக்குப் பொருத்தமான சம்பவம் நிகழ்ந்த தலம், இந்த திரு ஆதனூர். திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கத்தில் மதில் சுவர் எழுப்பும் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அந்தப் பணி தொய்வடைந்தது. மனம் வருந்திய ஆழ்வார், பெருமாளை வேண்டினார். திருமங்கையாழ்வார் உள்ளம் வாடுவதைக் காண திருமாலுக்கு ஏற்குமோ? உடனே கொள்ளிடம் நதிக்கரைக்கு வருமாறு அவரை பணித்தார்.
அங்கே ஒரு வணிகர் அவரை சந்திப்பார் என்றும் அவரிடமிருந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.பேருவகையுடன் கொள்ளிடக் கரைக்கு ஓடோடிச் சென்றார் ஆழ்வார். அங்கே தலைப்பாகை அணிந்து, ஒரு கையில் மரக்கால் என்ற அளவைக் கலனையும், ஒரு கையில் ஓலை, எழுத்தாணியும் தாங்கியபடி ஒருவர் காட்சியளித்தார். அவரைப் பார்த்த ஆழ்வாருக்கு ஏமாற்றம். பொருளோடு வருவார் என்று எதிர்பார்த்தால், வெற்று மரக்காலுடன் வந்து நிற்கிறாரே, இவரா பெருமாள் குறிப்பிட்ட வணிகர் என்ற ஏமாற்ற சந்தேகம்.
அவரிடம் விசாரித்தபோது, ‘ஆமாம், என்னை ஸ்ரீரங்கத்து அழகிய மணவாளன்தான் அனுப்பி வைத்தார்,’ என்று சொல்லி ஆழ்வாரின் சந்தேகத்தைத் தீர்த்தார் வணிகர். ஆனால் வெற்று மரக்கால்? ‘கவலைப்படாதே. இந்த மரக்காலை கையில் ஏந்தியபடி பரந்தாமனை உளமாற நினைத்தால், வேண்டிய பொருள் அனைத்தும் இந்த மரக்காலில் நிரம்பும்’ என்று விளக்கமும் அளித்தார். ‘அப்படியானால், நீங்களே இந்த மரக்காலால் பொருளை அள்ளிப் போடுங்கள். மதில் சுவர் கட்ட உழைத்தவர்களுக்கு நான் ஊதியம் தரவேண்டும்,’ என்றார் ஆழ்வார். உடனே வணிகர், அந்த மரக்காலால் ஆற்று மணலை அள்ளினார்.
‘இந்த மணலை உன் ஊழியர்களுக்கு அளந்து போடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. உண்மையாக யார் யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும் இந்த மணல் பொன்னாக மாறி, அவர்கள் கரங்களை நிறைக்கும். ஆனால், பணி செய்ததாகப் போக்குக் காட்டி ஏமாற்றியவர்களுக்கு வெறும் மணல்தான் கிடைக்கும்,’ என்று கூறினார் வணிகர். ஆழ்வாரும் ஒப்புக் கொள்ள, வணிகரே ஊதியப் பட்டுவாடா செய்தார். என்ன அதிர்ச்சி! பெரும்பாலோருக்கு வெறும் மணல் மட்டுமே ஊதியமாகக் கிடைத்தது! அவ்வளவுதான்; வேலை செய்யாமல் ஏமாற்றினாலும், தமக்கு ஊதியம் கிடைக்காத ஏமாற்றத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
‘இவன் நம்மை ‘ஏமாற்ற’ நினைக்கிறான். விடக்கூடாது இவனை,’ என்று ஆக்ரோஷமிட்டவாறு வணிகரை நெருங்கினார்கள். வணிகரும் அவர்களிடமிருந்து தப்ப அங்கிருந்து ஓடினார். நிலைமை எதிர்பாராதபடி விபரீதமாகப் போய்விடவே, திகைத்துப் போன திருமங்கையாழ்வாரும், தன் குதிரை மீதேறி வணிகரைத் துரத்தினார்.ஆதனூர் என்ற இந்தத் தலத்துக்கு வந்ததும், வணிகர் சட்டென்று பெருமாளானார். மரக்கால், எழுத்தாணி சகிதமாக இங்கேயே அர்ச்சாவதாரம் கொண்டார். உடனே, ‘என்னை மனம் கவர்ந்த ஈசனை, வான்வர்தம் முன்னவனை, மூழிக்களத்து விளக்கினை, அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை’ என்று ஒரு பாடல் தொடரைப் பாடினார். திருமங்கையாழ்வார்.
இதுவே இந்தத் தலத்துப் பெருமாள் மீதான திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனமாகக் கொள்ளப்படுகிறது. ‘என் உள்ளத்தில் நிறைந்திருப்பவனும், தன்னை முழுமையாக அனுபவிப்பதில் திருப்தி இல்லாதவர்களாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள நித்திய சூரிகளையும் ஏங்க வைப்பவனும், திருமூழிக்களம் எனும் மலைநாட்டு (கேரளம்) திவ்ய தேசத்தில் ஒளிமிகுந்தவனாக விளங்குபவனும், முக்காலங்களையும் கணக்கிட்டு மக்களைக் காப்பவனுமான பரந்தாமன் இந்த ஆதனூரில் ஆண்டளக்கும் பெருமாளாகப் பொலிகிறான்’ என்று உள்ளம் உருகுகிறார். இந்தப் பாடலின் மூலம் ஒரு விஷயம் புலனாகிறது.
அதாவது திருமங்கையாழ்வாரிடமிருந்து ஒரு வரியாவது பாசுரம் வாங்கிவிடவேண்டுமென்பதற்காகப் பெருமாளே, தானே விரும்பி சில திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார் என்பதுதான் அது! பரந்தாமன் வைத்திருக்கும் மரக்காலைப் பற்றி இன்னொரு புராண சம்பவமும் உண்டு. அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த அபூர்வ விஷயங்களில் காமதேனு என்ற பசு முதலாவது. அதற்குப் பிறகுதான் திருமகள் வந்தாள். நினைத்தவை எல்லாவற்றையும் அள்ளித் தரும் காமதேனு, தான் திருமகளுக்கும் முன்னதாகத் தோன்றியவள் என்ற வகையில் லேசாக மனசில் கர்வம் கொண்டிருந்தது.
இதைப் போக்க விரும்பினார் பாற்கடல் நாயகன். அவர் காமதேனுவிடம் ஒரு மரக்காலைக் கொடுத்து அதனைப் பொருட்களால் நிரப்பும்படி சொன்னார். பிறர் நினைப்பதெல்லாம் தரக்கூடிய தனக்கு இப்படி ஒரு சவால் விடப்பட்டதை எண்ணி இறுமாந்த காமதேனு தன்னிடம் உள்ள எல்லாப் பொருட்களையும் இட, மரக்கால் நிரம்பவேயில்லை. பிறகு பகவான், திருமகளை அழைத்து அவ்வாறே நிரப்புமாறு பணித்தபோது, அவள், தன் நாயகனை உளமார வேண்டிக் கொண்டு ஒரே ஒரு துளசி இலையை மரக்காலில் இட, அது நிரம்பி வழிந்தது. உண்மையான பக்தியே எல்லா நிறைவுக்கும் காரணம் என்பதை உணர்ந்தது காமதேனு. இப்படி ஒரு ஆ (பசு), தன் (நிலை உணர்ந்த) ஊர் என்பதே ஆதனூர் என்றாயிற்று என்று நயம்பட விளக்கு கிறார்கள், சான்றோர்கள்.
கோயிலில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்க வைத்தது. ஒரு ஜெர்மானிய தம்பதி, மனவேறுபாடு காரணமாக திருமண பந்தத்திலிருந்து விலகிவிட்டார்கள். இருவருமே ஒருவர் அறியாமல் மற்றொருவர் இந்திய சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், தமிழ்நாட்டுக்கும் வந்து இந்த ஆதனூர் திருத்தலத்துக்கும் வருகை தந்திருக்கிறார்கள். அதுவரை இந்தியாவில் எங்குமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிராத அவர்கள், இந்தத் தலத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் சந்தித்துக் கொண்டார்கள். உடனே மனசுக்குள்ளிருந்த கோபம், சந்தேகம், மாற்றுக் கருத்து எல்லாம் நீராய்க் கரைந்தோடின.
இரு ஜோடி கண்களில் நீர் பெருக, இருவருமே ஒருவரை ஒருவர் எந்நாளும் பிரிந்திருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டவர்கள்போல, அப்படியே அணைத்துக் கொண்டார்கள். அதாவது தம்பதியிடையே பிரிவை ஏற்படுத்துவது தற்காலிகக் கோபம், ‘தானே உயர்ந்தவர்’ என்ற மனச் செருக்குதான்; அதனால் அது உடனே களையப்படவேண்டும்; ஏனென்றால் மனம் ஒருமித்து வாழ்க்கையில் இணைந்தவர்கள் முற்றிலும் பிரிந்துவிடவேண்டும் என்று நினைப்பதேயில்லை;
அதை இறைவனும் விரும்புவதில்லை. ஏனென்றால் அந்த ஜெர்மானிய தம்பதியைப் பொறுத்தவரை அவர்களுடைய திருமணம் சொர்க்கத்தில்தானே நிச்சயிக்கப்பட்டிருக்கிறது! இப்படி, தன் பக்தராக இல்லாவிட்டாலும், வெறும் சுற்றுலாவாசிகளாக வந்த வெளிநாட்டவருக்கும் தன் கருணையை அள்ளி வழங்கியவர் இந்த ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்.ஜெர்மனி மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே உள்ள தொலைதூர பக்தர்களின் திருப்பணியும் கண்டது இந்தத் தலம். இதற்கும் ஒரு சம்பவம் விளக்கமாக அமைகிறது. பேரருள் வழங்கிய இந்தத் திருக்கோயில், ஒரு காலத்தில் பூமிக்குள் அப்படியே புதைந்து போனது.
தானே உருவாக்கிய இயற்கையின் விளைவாக இப்படி இந்தக் கோயில் புதையுண்டாலும், மீண்டும் மேலெழுந்து அருள்பாலிக்க விரும்பினார் பரம்பொருள். இதற்காக அவர் வடபகுதியிலிருந்து பக்தரை, தென்பகுதிக்கு வரவழைத்தார். ஆமாம், காஷ்மீரத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த அரசனின் புதல்விக்கு அமானுஷ்ய தீவினை பற்றியது. மாந்திரிகம் தெரிந்த எத்தனையோ பேர் வந்து அரசகுமாரியின் நோய் நீக்க முயற்சித்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆண்டளக்கும் ஐயனே அவள் மனதில் தோன்றினார். தீய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டதுதான் என்றாலும், அந்த மனசுக்குள்ளும் இறைவனின் அருள் ஒளி தோன்றும் என்பதுதான் எவ்வளவு அனுபவபூர்வமான உண்மை! அவ்வாறு தோன்றிய பெருமாள், அவளிடம், ஆதனூர் கோயிலை மீட்டெடுத்து செப்பனிடுமாறு ஆணையிட்டார்.
உடனே அவள் தன் தந்தையாரின் அனுமதியுடனும் உதவியுடனும் இங்கு வந்து இப்போதையக் கோயிலை நிர்மாணித்தாள். அவ்வாறு கோயில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதுமே அவளைப் பற்றியிருந்த தீவினைகள் பொசுங்கி,கரைந்து, மறைந்தன. காஷ்மீரத்து இளவரசியின் பக்தி தோய்ந்திருக்கும் இக்கோயிலுக்கு, சரபோஜி மன்னரும் சேவை புரிந்திருக்கிறார். இக்கோயிலுடனான இவருடைய தொடர்பை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கருவறையில் ஆண்டளக்கும் பெருமாள் கம்பீரமாக சயனித்திருக்கிறார். மரக்காலும், எழுத்தாணி-ஓலையும் தாங்கியிருக்கிறார். இவரைப் பஞ்சணையாய்த் தாங்கியிருக்கும் ஆதிசேஷன் திருமேனியில் சங்கும், சக்கரமும் பொறிக்கப்பட்டிருப்பதை அர்ச்சகர் காட்டும் தீப ஒளியில் தரிசிக்கலாம்.
ஒரு சமயம், தனிமையை விரும்பி நாராயணன் இந்தப் பகுதிக்கு வந்தபோது, அவரை என்றும் பிரியாத ஆதிசேஷன் அவரைக் காணாது உலகெங்கும் தேடித் தேடித் தவித்து இறுதியாக இந்தத் தலத்தில் அவரைக் கண்டுகொண்டான். அவனை மேலும் சோதிப்பதற்காக, பரந்தாமன், ‘நீதான் என்னைத் தாங்கும் ஆதிசேஷன் என்பதற்கு என்ன ஆதாரம்?’ என்று கேட்டார். உடனே ஆதிசேஷன் பல அடையாளங் களைக் காட்டி தன்னை நிரூபித்தான். அதுகண்டு அகமகிழ்ந்த பரந்தாமன், தானே அவனுக்கு ஆசார்யனாக மாறி, அவன் தோள்களில் சங்கு, சக்கர முத்திரைகளைப் பதித்து அவனுக்கு நிலைத்த அருளை வழங்கினார். அந்த சங்கு&சக்கர அடையாளம்தான் நாம் இப்போது காண்பது.
பெருமாள் கருவறைக்கு வலது பக்கத்தில் ஆஞ்சநேயரும், இடது பக்கத்தில் யோக நரசிம்மரும் அருள்காட்சி நல்குகிறார்கள். இந்த ஆஞ்சநேயர் தவிர, கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அவருக்குத் தனி சந்நதி ஒன்று உள்ளது. அங்கே ராமர் பாதமும் அமைந்துள்ளது. இலங்கையிலிருந்து அயோத்திக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் மகிமையால் ஈர்க்கப்பட்ட ஆஞ்சநேயர் இங்கே தங்கி ராமநாமம் ஜபித்து, இத்தலத்தை மேம்பட வைத்தார். அவர் போனபிறகு, அங்கே வந்த ராமர், ‘என் மனதுக்கினியவன் இங்கு வந்தானா?’ என்று ஆதூரத்துடன் விசாரித்தாராம்.
அனுமன் அங்கே வந்ததையும், ராமநாமம் ஜபித்ததையும் கேள்விப்பட்ட ராமர், தன் பாதப் பதிவை அங்கே விட்டுச் சென்றாராம். இந்தத் தலத்தின் மேன்மையைக் கூட்டும் அந்த அனுமனையும் (வீர சுதர்ஸன ஆஞ்சநேயர்), ராமர் பாதங்களையும் கோயிலிருந்து சற்றுத் தொலைவில் தனியே தரிசிக்க முடிகிறது. திருமங்கையாழ் வாருக்கு வணிகராக வந்து வழிகாட்டிய உற்சவப் பெருமாள் இங்கும் ஸ்ரீரங்கம் போலவே அழகிய மணவாளப் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.
தாயார் கமலவாசினி, தனி சந்நதியில் அருள்பொங்க தரிசனம் தருகிறார். அழகிய மணவாளரின் பத்தினி என்பதால் ஸ்ரீரங்கநாயகி என்றும் இந்தத் தாயாருக்குப் பெயர் உண்டு. ஆதிசேஷனுக்கு ஆசானாக அமைந்து அருள் புரிந்ததாலும், திருமங்கையாழ்வாருக்கு அவர் இன்னல் தீர வழிகாட்டியதாலும், இந்த ஆதனூர் தலத்தை குருஸ்தலம் என்றே சொல்கிறார்கள். அதாவது நவகிரக குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வந்து பரிகாரம் செய்துகொள்ளலாம்
என்கிறார்கள்!
தியான ஸ்லோகம்
தேவ ஸ்ரீபணிபுங்க வாங்க சயன ஸ்ரீரங்க நாயக்யஸௌ
தீவ்யஞ்ச ப்ரண வாக்யமாதனபுரே தத்வ்யோமயா நோத்தமம்
தீர்த்தம் ஸூர்ய ஸரஸ் சுரேட்ய ஸுரபி சாக்ஷாத் க்ருத ப்ராங்முக
நித்யம் வஜ்ரி புரோகமைஸ் ஸுரகணை ஆராதிதோ த்ருச்யதே
எப்படிப் போவது: கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையிலிருந்து
3 கி.மீ. தொலைவில் உள்ளது திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயில். கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயில், திருஆதனூர், சுவாமிமலை வழி, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612302.