ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழாவையொட்டி பந்தல் உள் அலங்காரப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான கொடியேற்றம் ஏப்.3ம் தேதியும், திருக்கல்யாணம் ஏப்.11ம் தேதியும் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்தாண்டு திருக்கல்யாண வைபவம் வரும் ஏப்.11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஏப்.3ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி கோயில் முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பந்தல் உள் அலங்காரப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியில் பந்தல் அய்யனார் என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர். பந்தல் அலங்காரம் குறித்து அய்யனார் கூறுகையில், ‘திரு ஆடிப்பூரக் கொட்டகையில் உள் அலங்காரப் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் பணி முழுமையாக முடியும்’ என்றார்.