ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள திருவாச்சி கிராமத்தில் அவிநாசி- அத்திக்கடவு திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிற 20ம் தேதியில் இருந்து பாஜ சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாள் போராட்டத்தில் தலைவர்களோடு நானும் கலந்து கொள்ள உள்ளேன். இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள பழமையான அணைகளின் மதகுகள் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.