சென்னை: என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 9 ஆண்டுகளுக்கு பின்னர் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
மேலும் அவருடன் விஷ்ணு விஷால், நிரோஷா, விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தங்கதுரை என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். லால் சலாம் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படம் வெளியான நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது, என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டு தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.