திண்டிவனம்: பாமகவில் அடுத்தடுத்து நிர்வாகிகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக இன்று பதிலளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்ததால், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே கட்சியை யார் உரிமை கொண்டாடுவது என கடுமையான போட்டி நிலவுகிறது. தந்தை, மகன் இருவரும் மாறிமாறி போட்டி நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி நிர்வாகிகள் நீக்கம், நியமனம் என போட்டா போட்டி அரசியல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தினமும் தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்றும் ஏராளமானோர் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்தனர். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் தானையம்மா, பாமக மாநில துணை தலைவர் காசிநாதன், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், வேலூர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் ராமதாசை சந்தித்தனர். செங்கல்பட்டு, வேலூர், கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்.
நேற்று முன்தினம் வரை பாமகவில் 27 மாவட்ட செயலாளர்கள், 6 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். நேற்றும் பாமகவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றம் தொடர்ந்தது. அதன்படி திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் முத்துசரவணன் நீக்கம் செய்யப்பட்டு புதிய செயலாளராக சீயோன் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளராக சுரேஷ், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவராக முத்துராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவராக மகாராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த நாராயணன் நீக்கப்பட்டு செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாவட்ட தலைவராக இருந்த சிவராமன் மாற்றப்பட்டு லட்சுமணனும், சேலம் தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமிக்கு பதிலாக தொப்பகவுண்டரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெயப்பிரகாஷ் நீக்கப்பட்டு நடராஜன் நியமிக்கப்பட்டார். இதேபோல் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தில் 10 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தலைவர்கள், ஒரு நகர செயலாளர்கள், 3 பேரூர் செயலாளர்களையும் அதிரடியாக மாற்றம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் இதுவரை 31 மாவட்ட செயலாளர்கள், 9 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் மாற்றி உள்ளார்.
இந்நிலையில், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு அணிகளில் உள்ள நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றுவதற்கான முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோபு தலைமையில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
நிர்வாகிகள் மாற்றத்திற்கு பின்பு நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தனியாக மாநில பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற உள்ளதாகவும் பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனிடையே அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?, பாமக பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்பதற்கு இன்று (வியாழக்கிழமை) பதில் அளிப்பதாக கூறியிருந்தார். இதனால் ராமதாஸ் தோட்டத்தில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
14 ஆண்டுகளுக்கு பின் ராமதாசுடன் த.வா.க. திருமால்வளவன் சந்திப்பு; பாமகவுடன் இணைப்பா?
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை நேற்று மாலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகனின் சகோதரரும் அக்கட்சியின் மாநில ஒழுங்கு குழு நடவடிக்கை தலைவருமான திருமால்வளவன் நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி உடனிருந்தார். பின்னர் திருமால்வளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசியலை கடந்து ராமதாஸ் என்ற மாபெரும் போராளி, தமிழினப் போராளி, சமூக நீதிக்காக சமரசமின்றி போராடி வருகிறார். அரசியல் பாதை தடத்தை பின்பற்றி அரசியல் பல்வேறு கட்ட பரிணாமத்தில் போராடி வரும் ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியலில் உள்நோக்கம் இல்லை. பிரிந்திருக்கிற நாங்கள் மனமகிழ்வை தர வேண்டும் என்பதால் வந்தேன். நான் வந்தது அன்புமணிக்கு பிடிக்காது. அதனாலே உடனடியாக ராமதாசை சந்திக்க அன்புமணி வருவார்’ என்றார். பாமகவில் தந்தை-மகன் மோதல் வெடித்து உள்ள நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ராமதாஸ்-திருமால்வளவன் சந்தித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முகுந்தன் திடீர் ஆலோசனை
ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பாமக இளைஞரணி சங்கத் தலைராக நியமிக்கப்பட்ட முகுந்தன், தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 5 நாட்களாக தைலாபுரம் தோட்டத்திற்கு வராமல் இருந்த முகுந்தன் நேற்று ராமதாசை சந்தித்து தன் பதவி விலகல் சம்பந்தமான முழு விபரங்களை அளித்தார். பின்னர் ராமதாஸ் அவரிடம் ஒருமணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.