சென்னை: தந்தை-மகன் மோதல் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று மட்டும் வக்கீல் பாலு மற்றும் 11 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 9 மாவட்ட தலைவர்களை நீக்கி ராமதாஸ் அதிரடி காட்டியுள்ளார். பதிலடியாக ராமதாஸ் ஆதரவாளரை அன்புமணி நீக்கி உள்ளார். கட்சியில் தனது செல்வாக்கு நிரூபிக்க 10 மாவட்டங்களில் பொதுக்குழுவை அன்புமணி கூட்டி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்- செயல் தலைவரும், மகனுமான அன்புமணி இடையே அதிகார மோதல் எழுந்து உள்ள நிலையில், சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து, இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.
ஆனால் அவர்களை மீண்டும் அதே பதவியில் நியமித்து அன்புமணி உத்தரவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தை ராமதாஸ் விதித்த 5 நிபந்தனைகளை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அன்புமணி சென்ற சில நிமிடங்களில் பாமக உட்கட்சி விவகாரம் மற்றும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜ தூதரான ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்திற்கு வந்தனர். அவர்கள் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கு சுட்டிக்காட்டி கூட்டணி வர மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் ஆடிட்டர் குருமூர்த்தியை அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, சென்னை வந்த ராமதாஸ் 3 நாட்கள் தங்கி ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் புறப்படுவதற்கு முன் பேட்டியளித்த ராமதாஸ், ‘யாருடன் கூட்டணி 3 மாதத்தில் தெரியவரும்’ என்று கூறினார். கடந்த ஒரு வாரம் ராமதாசுடன் அன்புமணி மற்றும் பாஜ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் கட்சியில் நிர்வாகிகள் நீக்கம், நியமனம் படலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தைலாபுரத்துக்கு திரும்பிய ராமதாஸ், நேற்று மீண்டும் நிர்வாகிகள் நீக்கம், நியமனம் படலத்தை தொடர்ந்தார். பாமகவில் இருந்து இதுவரை 49 மாவட்ட செயலாளர்களையும், 27 மாவட்ட தலைவர்களையும் ராமதாஸ் நீக்கி உள்ளார்.
நேற்று மட்டும் பாமகவின் வழக்கறிஞர் அணியான சமூக நீதி பேரவையின் தலைவரான பாலு மற்றும் 15 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 13மாவட்ட தலைவர்களை நீக்கி ராமதாஸ் அதிரடி காட்டியுள்ளார். அதேநேரத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் பாஸ்கரனை பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். ஆனால் அன்புமணிக்கு நீக்கும் அதிகாரம் இல்லை என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பாமகவில் நிலவும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாவட்ட வாரியாக பொதுக்குழுவை கூட்ட அன்புமணி முடிவு செய்துள்ளார். இது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிர்வாகிகளில் 80 சதவீதம் பேர் அன்புமணி பக்கம் உள்ளனர். சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே ராமதாஸ் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்போதுள்ள சூழலில் பொதுக்குழு கூட்டப்பட்டால் அது அன்புமணிக்கே சாதகமாக முடியும் நிலை உள்ளது.
ஆனால் பொதுக்குழுவை கூட்ட தனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறி வருகிறார். பாமக பொதுக்குழு கூட்ட ராமதாசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்று கூறப்படுவதால் மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழு கூட்டங்களை நடத்த அன்புமணி திட்டமிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அன்புமணி தரப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
அதன்படி, ஜூன் 15ம் தேதி முதல் இந்த சுற்றுப் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு ஒரு கூட்டத்திலும் மாலை 3 மணிக்கு ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஜூன் 15ம் தேதியிலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 16ம் தேதியும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஜூன் 17ம் தேதியும் பொதுக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஜூன் 18ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் ஜூன் 19ம் தேதி சேலம், தர்மபரி மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாமக தலைவர் அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாமக மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாமகவின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.