சென்னை: 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2036 வரை அந்த குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலிலும், கடலூர் மாவட்டம் மக்கள் நலனிலும், தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், 64,750 ஏக்கர் நிலங்களில் சுரங்கம் அமைப்பதற்காக என்எல்சிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் மூன்றாவது சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.