பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருவார சிகிச்சைக்கு பின் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பாமக நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: மனஅழுத்தம் காரணமாக எனது உடல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக ஓய்வெடுக்கவும், மீண்டும் மருத்துவமனைக்கு வர வேண்டுமெனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராமதாசை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளேன்.
கூட்டணி பற்றி ராமதாசும், அன்புமணியும் சேர்ந்துதான் முடிவு செய்வார்கள். கூட்டணி பற்றி செல்வப்பெருந்தகை பேசவில்லை. அவர் ராமதாசை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார். தந்தை, மகன் இருவருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை நீண்டு கொண்டே இருக்கிறது. என்னைப் பற்றி தவறுதலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜி.கே.மணி கூட்டணி பற்றி பேசுகிறார் என்று, என் மீது தவறுதலாக கூறி வருகின்றனர். இதனால் மன வேதனையுடன் இருக்கிறேன்.
பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால் என் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. எனக்கு பல்வேறு கட்சியிலிருந்து வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்தான் உயிர்மூச்சு. இருவரும் ஒன்றிணைந்து பேசினால் அனைத்து பிரச்னையும் சரியாகிவிடும். நான் இதுவரை அன்புமணியை பற்றி தவறுதலாக பேசியதே இல்லை. அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்க பேசியது மற்றும் முதலமைச்சராக்க வேண்டும் என தொடர்ச்சியாக நான் தான் பாடுபட்டேன். அப்படியெல்லாம் நான் இருந்திருக்கிறேன்.
ஆனால் என்னை தவறுதலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மாறுபட்ட சிந்தனையுடன் நான் இருந்திருந்தால் நான் எவ்வளவோ செய்து இருக்கலாம். ஆனால் பாமகவிற்காக பல வருடம் உழைத்திருக்கின்றேன். என்னை பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்து பாராட்டினார். உன்னை வைத்து ஒரு புத்தகம் எழுத போகிறேன் எனத் தெரிவித்தார். ஆனால் என்னை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தவறுதலாக பதிவிட்டு வருகின்றார்கள். இதனால் மிகவும் மன வேதனையுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* கண்ணீர் விடுகிறார் ராமதாஸ்
ஜி.கே.மணி கூறுகையில், ‘நிறுவனர் ராமதாஸ் ஊடகங்களை சந்திக்கும்போது மிக உற்சாகமாக இருக்கிறார். நாங்கள் தனியாக பேசும்போது கண்ணீர் விடுகிறார். மிக வேதனைப்படுகிறார். மேலும் சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றியும், அன்புமணி பற்றியும் தவறுதலாக பாமக நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர். இதுபோல் பதிவுகளை யாரும் பதிவிட வேண்டாம். கட்சியில் பொறுப்பு போடுவதும், பொறுப்பை எடுப்பதும் கட்சியின் நல்ல வளர்ச்சிக்கு ஏற்றதல்ல, இது நல்ல தீர்வாக அமையாது’ என்றார்.