சென்னை: பாமக தலைவர் அன்புமணி, திடீர் பயணமாக, நேற்று மாலை விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே, கடும் அதிகார மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறிக் கொள்வதோடு, ஒருவரின் ஆதரவாளரை, மற்றொருவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவது, சேர்ப்பது என கட்சிக்குள் பெரும் குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி திடீர் பயணமாக, நேற்று மாலை 6 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அன்புமணி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.