காஞ்சிபுரம்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட பாமகவினர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கங்கைகொண்டான் மண்டபம் சிக்னலில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவை நகர போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாநகரில் மைய பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டதால் நீண்ட வரிசையில் அணிவகுத்து வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு: பரனூரில் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாமகவினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், பாமகவினரை கைது செய்தனர்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே 30க்கும் மேற்பட்ட பாமகவினர் கையில் பாமக கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திடீர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் நேரில் வந்து, இன்னும் 2 மணி நேரத்தில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அமைச்சர்கள் வருகை தர உள்ளனர். எனவே, கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும், பாமகவினர் சாலை மறியலை கைவிடவில்லை. இதையடுத்து, அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பாமக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் நடராஜன், நைனியப்பன், கணேசமூர்த்தி, ரவீந்திரன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோல், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர் தமிழரசு தலைமையில் சாலை மறியிலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில், பாமகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகளை கைது செய்தனர். பின்னர், பாமகவினரை மாலை விடுவித்தனர்.