சென்னை: தந்தை, மகன் பிரச்னையில் திமுக தலையீடு என்பது அப்பட்டமான பொய். அன்புமணி விவகாரத்திற்கான முடிவு போக, போக தெரியும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.
சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி நேற்று கூட்டியிருந்த நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வரும் நிலையில் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பேசும் பொருளாகி உள்ளது. இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பிற்பகலில் தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கேள்வி: அன்புமணி சேலம் செல்லும் நேரத்தில் அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதற்காக 2 எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா?.
பதில்: எம்எல்ஏக்களுக்கு அந்த நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போய் இருக்கலாம். அவர்களிடம் நான் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறேன். ரத்தம் மற்றும் மற்ற சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் பாலோ பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்.
கேள்வி: அன்புமணி மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினரை சந்திக்கிறார். தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார். கட்சியினர் அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பண்ணுகிறாரே?.
பதில்: அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர். நீங்கள் வேலை செய்ய விடாமல் என்னை துரத்துகிறீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை தொடராதீர்கள். போன வாரம் துரத்தினீர்கள். இனிமேல் துரத்தாதீர்கள். தொந்தரவு பண்ணாதீர்கள்.
கேள்வி: தந்தையிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் கட்டளையிட்டால் அதற்கு நான் தயார் என்று அன்புமணி கூறியுள்ளார். அன்புமணி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?.
பதில்: அதற்கான முடிவு போக, போக தெரியும் என்று பாட்டு பாடினார்.
கேள்வி: பாமக தலைவருக்கும், நிறுவனருக்கும் உள்ள பிரச்னையில் திமுக தலையிடுவதாக சொல்கிறார்கள். திமுக தலையிடுகிறதா?.
பதில்: இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய். இவ்வாறு ராமதாஸ் பதில் அளித்தார்.