சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு என சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி கருத்தரங்கில் ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் மகாவிஷ்ணு என்பவர் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையானது. மாற்றுத் திறனாளிகள் குறித்தும் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார். மறுபிறவி குறித்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளிஆசிரியர் எழுந்து வந்து கண்டனம் தெரிவித்தார். முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத் திறனாளிகளாக, ஏழைகளாக பிறக்கிறார்கள் என மகாவிஷ்ணு பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சொற்பொழிவு நடத்தப்பட்ட அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் தந்த ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சர்ச்சையாக பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியர் சங்கரை மேடையில் அமர வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார். பின்னர் பேசிய அவர், “பள்ளிகள்தான் பகுத்தறிவை விதைக்கும் இடம். பிற்போக்கு சிந்தனையை கேள்வி கேட்டது தமிழ்தான். பிற்போக்கான சிந்தனைகளை விதைப்பதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. யார் எதை சொன்னாலும் அதை மாணவர்கள் பகுத்தறிந்து செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவு தொடர்பாக அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து விசாரிக்க இருக்கிறோம். சர்ச்சைக்குரிய சொற்பொழிவு குறித்து எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான், முதல்வருக்கும் எனக்கும் ஏற்பட்டது.எடுக்கக்கூடிய நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். யார் எதை பேசினாலும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிவுசார்ந்தவர்களை நாம் பள்ளிகளுக்கு அழைத்து வர வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை தெரிந்துகொண்டு சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.