பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்கான நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிரிடுவதில் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், வேட்டைகாரன்புதூர், மயிலாடும்பாறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
இதில், ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் நன்கு விளைந்ததையடுத்து, மே மாதத்தில் அறுவடை செய்யப்பட்டன. பின்னர், கடந்த மாதம் பருவமழை மற்றும் ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று நடும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். தற்போது, சாகுபடி செய்யப்படும் நெல், வரும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.