ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் மூன்று ஆண்டுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில் ஆனைமலை, ரமணமுதலிபுதூர், கோட்டூர், கோபாலபுரம், அம்பராம்பாளையம், வேட்டைக்காரன்புதூர், மயிலாடும்பாறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் நன்கு விளைந்ததையடுத்து, ஏப்ரல் இறுதியில் அறுவடை செய்யப்பட்டன. பின் கடந்த மாதம் பருவமழை துவக்கம் மற்றும் ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.
இதைத்தொடர்ந்து, சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு, முதல்போக சாகுபடிக்கு நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பின் கடந்த சில வாரத்திற்கு முன்பு, முதல் போக நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். சமீபமாக துவங்கப்பட்ட நெல் சாகுபடியானது வரும் டிசம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் வந்துவிடும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை மற்றும் கோட்டூர், ரமணமுதலிபுதூர் சுற்று வட்டார பகுதியில் தென்னை சாகுபடியே அதிகமாக இருந்தாலும், சுமார் 6,400 ஏக்கரில் ஒவ்வாரு ஆண்டும் இரண்டு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு போதியளவு பருவ மழையின்றி வறட்சியானது. மேலும், ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டிருந்தது.
இதனால், ஆனைமலை கோட்டூர் சுற்று வட்டாரத்தில் நெல் சாகுபடி பாதிக்கு பாதியாக குறைவானது. கடந்த சில ஆண்டுகளாக ஆனைமலை தாலுகா பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மட்டும், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நெல் சாகுபடி இல்லாத விளை நிலங்களில் செடி, கொடிகள் படர்ந்து காடு போலானது. ஆனால் இந்த ஆண்டில் ஆழியார் அணையிலிருந்து, ஜூன் மாதம் துவக்கத்தில் தண்ணீர் திறப்பு இருந்ததுடன், தென்மேற்கு பருவமழையும் ஓரளவு பெய்துள்ளது.
இதனால், ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள விளை நிலங்கள் செழிப்படைய ஆரம்பித்தது. இதையடுத்து நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவருமே, தங்கள் விளை நிலங்களை சீர்படுத்தி முதல்போக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சியான இடம்போல் இருந்த நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலம் அணைத்திலும் நாற்று ஏற்படுத்தப்பட்டு, தற்போது அவை நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.